Ten Hours – திரை விமர்சனம்

Ten Hours Movie Review
நடிகர்கள் – சிபிராஜ், சரவணன், கஜராஜ், ராஜ் ஐயப்பா, தங்கதுரை, குரேஷி, முருகதாஸ், ஷாரு மிஷா.
ஒளிப்பதிவு – ஜெய் கார்த்திக்
இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி
கதை
சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 25 பயணிகளுடன் ஒரு ஆம்னி பேருந்து புறப்பட்டு செல்கிறது. சேலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது நள்ளிரவு நேரத்தில் பஸ்ஸில் ஒரு கொலை சம்பவம் நடக்கிறது.
இன்னொரு புறம் சேலம் ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜ் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டு, அன்று இரவு சபரிமலை கோவிலுக்கு புறப்பட தயாராகிறார்.
அப்போது பெண் ஒருவரை காணவில்லை என காவல் நிலையத்திற்கு போன் வருகிறது. உடனே அதுகுறித்து விசாரணையை தொடங்குகிறார் சிபிராஜ்.
அப்போதுதான் ஆம்னி பேருந்தில் நடந்த ஒரு கொலை சம்பவம் குறித்தும் தகவல் வருகிறது. அதன் பிறகு வரிசையாக பல கொலைகள் அடுத்த 10 மணி நேரத்தில் நடக்கிறது.
இந்த தொடர் கொலைகளுக்கான பின்னணி என்ன? யார் அந்த கொலையாளி? எதற்காக கொலை செய்தார்கள்? இதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபிராஜ் எப்படி கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதி கதை.
இயக்கம்
பொதுவாகவே சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு இருக்கும்.
அதிலும் ஓடும் பஸ்ஸில் ஒரு கொலை என வித்தியாசமான கன்டென்ட்டை கொடுத்து ரசிக்கும்படி படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்.
திரைக்கதை
ஒரு இரவு, ஒரு பேருந்து, ஒரு கொலை, பஸ்ஸில் பயணம் செய்யும் 25 பயணிகள், அடுத்து என்ன என்பதை யூகிக்க முடியாத வகையில் ரொம்பவும் ராவான படத்தை ரசிகர்களுக்கு தந்துள்ளார்.
படத்தில் ஹீரோயின் இல்லாமல், பாடல் இல்லாமல் முற்றிலும் சஸ்பென்சாக கதையை நகர்த்திச் சென்றது சிறப்பு. அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்தியாசமான கதையில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சிபிராஜ்.
சிபிராஜ்
சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கும் போலீசாக அசத்தலான நடிப்பை சிபிராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார். மொத்த கதையையும் தனி ஆளாக தனது தோளில் சுமந்து உள்ளார்.
நெற்றியில் பட்டை, கழுத்தில் மாலை என மாறுபட்ட போலீஸ் கெட்டப்பில் அவர் துப்பறியும் காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. இந்த படம் அவருக்கு கம்பேக்காக அமையும்.
கஜராஜ்
சப்-இன்ஸ்பெக்டராக வரும் கஜராஜ் காட்சிகள் படத்துக்கு கூடுதல் பலம். டாக்டராக வரும் ஜீவாரவி, ஆம்னி பேருந்து கிளீனராக வரும் முருகதாஸ் மற்றும் திலீபன், உதயா, சரவண சுப்பையா, சருமிஷா, நிரஞ்சனா ஆகியோரது நடிப்பு படத்துக்கு பக்க பலமாக அமைந்து உள்ளது.
காமெடி
பரபரப்பாக செல்லும் கதையில் ஆங்காங்கே தங்கதுரையின் காமெடி கலகலப்பை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவு
ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு பெரிய பலம். ஒரு பேருந்துக்குள் முடிந்த வரை காட்சிகளை ரசிக்கும் படியாக கொடுத்து கதைக்கேற்ற மூடை நமக்கு வரவழைக்கிறார்.
இசை
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை கதையோடு நம்மை பயணிக்க வைக்கிறது.
பிளஸ்
ஒரு இரவு ஒரு பேருந்து ஒரு கொலை என சஸ்பென்ஸ் படத்தை கிரிப்பிங் ஆக கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
அதோடு இரவில் ஒரு பேருந்து பயணம் எப்படி இருக்குமோ அந்த வகையில் திரைக்கதையை நகர்த்தி இருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது.
அவருக்கு உறுதுணையாக ஒளிப்பதிவாளரும் இசை அமைப்பாளரும் கைப்பிடித்து தூக்கி விட்டுள்ளனர். படத்தில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லாமல் கொடுத்து இருப்பது பெரிய பிளஸ்.
மைனஸ்
கதைக் கரு வித்தியாசம் என்றாலும் அதை காட்சிப்படுத்திய விதம் புதுமையாக இல்லை. நிறைய சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் பார்த்து பழகிய காட்சிகளும் வசனங்களும் இருப்பது மைனஸ் ஆக தோன்றுகிறது.
இருப்பினும் 2 மணி நேரம் ரசிகர்களை இருக்கையில் கட்டி போட்ட இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.