Actor Sri : மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ – குடும்பத்தினர் அறிக்கை!

வழக்கு எண் 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் actor sri. தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் படத்திலும் இரு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு போன்ற படங்களில் நடித்தவர் கடைசியாக ‛இறுகப்பற்று’ படத்தில் நடித்தார்.
ஒருகட்டத்தில் இவருக்கு போதிய சினிமா வாய்ப்புகள் வரவில்லை. இதனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.
சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாதபடி இருந்தார். மேலும் ஆபாச ரீல்ஸ் எல்லாம் போட்டு பதிவிட்டு இருந்தார்.
இவை வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள், திரையுலகினர் அவருக்கு என்ன ஆனது என கேட்டு பதிவிட்டு இருந்தனர்.
‘இறுகப்பற்று’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூட எக்ஸ் தளத்தில், ‛ஸ்ரீ பற்றி தகவல் தெரிந்தால் சொல்லுங்கள், அவரை மீட்டு கொண்டு வர உதவுகிறோம்’ என பதிவிட்டு இருந்தார்.
இந்தச்சூழலில் ஸ்ரீ மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில், ‛‛நடிகர் ஸ்ரீ (ஸ்ரீராம்) தற்போது மருத்துவரின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறார்.
வலைதளங்களில் இருந்து சிறிதுகாலம் அவர் விலகுகிறார் என நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
அவரது உடல்நிலைப் பற்றிய வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்கும்படி கேட்கிறோம்.
மேலும் சிலர் Actor Sri பற்றி தெரிவிக்கும் கருத்துக்களை நாங்கள் ஆதரிக்கவில்லை, மறுக்கிறோம்.
அவர் நல்லபடியாக குணமடைந்து வர வேண்டும். அதுவரை அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி”.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.